அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது.

தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி.

நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள்.

கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள்.

“…”

“என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணிட்டு இருக்கா?”

“…”

“ஒத்த பொண்ணு ஒத்த பொண்ணுனு ரொம்ப செல்லம் குடுத்தீங்களே, எல்லாம் இப்படி இவ ஊர் மேயிறதுக்கு தானா?”

“தேவா…”

“இப்ப கூட tuitionக்கு தான் போயிருக்காளோ இல்ல எவனோடயாவது ஊர் சுத்திட்டு இருக்காளோ?”

“ப்ச், தேவா…”

“உடனே அவளுக்கு phone போடுங்க. வீட்டுக்கு வரச்சொல்லுங்க. வரட்டும் அவ, கண்டதுண்டமா வெட்டிப் போடுறேன்…”

“தேவகி!” எனது குரல் சற்று உரக்க விழுந்தது.

“இன்னைக்கு ஒன்னு அவ சாகணும் இல்ல நான் சாகணும். வரட்டும் பாத்துக்குறேன்…”

“சும்மா இரு! அத குடு இங்க” என்றபடி ஆணுறையை எனது கையில் எடுத்துக் கொண்டு, “எங்க இருந்து எடுத்த இத?” என்றேன்.

“அவ school bagல தான். Front zipல இருந்தது. என் தலையெழுத்து, எனக்குனு வந்து இப்படி வாய்ச்சிருக்கே, நான் என்ன பண்ணுவேன்…” என்று புலம்பத் தொடங்கினாள்.

அதை மீண்டும் front pouchல் வைத்து விட்டு, “நீ அவகிட்ட இதைப் பத்தி பேசாத. அறியாத வயசு அவளுக்கு, நீ ஒன்னு கெடக்க ஒன்ன சொல்லி பிரச்சனைய பெருசாக்கிடாத.”

“அறியாத புள்ளையா இப்படி காரியம் பண்ணுவா? நீங்க வீணா அவளுக்கு வக்காலத்து வாங்காதீங்க” என்று என் மீது கோபத்தைத் திருப்பினாள்.

“இது அவகிட்ட எப்படி வந்துச்சுனு நமக்கு தெரியுமா? கூட படிக்கிற புள்ளைங்க யாராவது கூட இவ bagல போட்டுருக்கலாம்ல?”

“அது உண்மையாவே இருந்தாலும் அப்படிப்பட்ட புள்ளைங்க கூட இவளுக்கு என்ன சகவாசம் வேண்டிக் கிடக்கு?”

“ப்ச், அதுதான் உண்மைனு சொல்லல. ஆனா அப்படி நடக்கவும் வாய்ப்பிருக்குனு சொல்றேன்.”

“அப்ப உண்மை என்ன? இவ கைல இது எப்படி வந்துச்சுனு எனக்கு தெரிஞ்சாவணும்.”

“அத அவகிட்டயே கேப்போம். கேக்குறேன். பக்குவமா பேசித்தான் அவகிட்ட இருந்து உண்மைய தெரிஞ்சுக்க முடியும். கோவப்பட்டா வேலை நடக்காது. நான் அவகிட்ட பேசிக்குறேன். அதுவரைக்கும் நீ அவகிட்ட இது தெரிஞ்ச மாதிரி காமிச்சுக்காத. சரியா?”

“…”

அவள் முன் எனது கையை நீட்டி “என் மேல ஆணை. ஒரு துளி கூட அவகிட்ட தெரிஞ்ச மாதிரி காமிக்கக்கூடாது.”

“எப்படிங்க முடியும்? எனக்கு இதயம் படபடனு அடிச்சுக்குது. எப்ப வேணாலும் வெடிக்குற மாதிரி இருக்கு. அவளப் பாத்த உடனே பத்ரகாளியா மாறிடுவேன். அவ்வளவு கோவம் இருக்கு. எப்படி ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்க முடியும்?”

“அப்படினா அவகிட்ட எதுவுமே பேசாத. நம்ம roomல போய் படுத்துக்கோ. அவகிட்ட ஏதாவது சொல்லி நான் சமாளிச்சுக்குறேன்.”

கண்ணீரை நிறுத்த முடியாமல் அழுது கொண்டே இருந்தாள்.

“சரியா” என்றேன்.

என் கைகளில் தன் முகத்தைப் பதித்துக் கொண்டு, “எனக்கு பயம்மா இருக்குங்க. நம்ம பொண்ணு நம்மள மீறி போயிட்டாளோனு பயம்மா இருக்குங்க” எனக்கூற, அவள் கண்ணீர் என் கைகளை நிரைத்தது.

என் தோளோடு அவளை இழுத்தணைத்துக் கொண்டு, “கவலப்படாத தேவா, நான் அகல்ட்ட பேசி அவள நல்லவழிக்கு கொண்டு வர்றேன்” என்றபடி, அடுத்து என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினேன்.

தேவகியும் அகல்யாவைப் போல் அவள் பெற்றோருக்கு ஒரே குழந்தை. என்னைப் போல் கூட்டுக் குடும்பத்தில் வளராமல் தனிக்குடித்தனத்தில் வளர்த்தவள். அவளுக்கு நல்ல கல்வியைத் தந்த அவள் பெற்றோர் நல்ல பேச்சுவழக்கு கற்றுக் கொடுக்கத் தவறி விட்டனர். English literature பயின்ற அளவிற்கு அவள் இங்கிதம் பழகவில்லை. எதையெடுத்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று வாயளந்து குட்டையைக் குழப்புவதில் வல்லவள். எனவே அகல்யாவை நான் தனியாகக் கையாள்வதே உசிதம்.

“ம்மா…” என்றபடி மாலை ஏழு மணியளவில் அகல்யா வீட்டுக்குள் வந்தாள்.

“உள்ள படுத்திருக்கா. அம்மாவுக்கு உடம்பு சரியில்ல” என்றேன்.

“என்னாச்சுப்பா?”

“காய்ச்சல். மாத்திரை போட்டுட்டு தூங்க சொல்லிட்டேன்.”

“ஓ. சரிப்பா. நீ சாப்டியா?”

“இல்லடா, உனக்காகத்தான் waiting. கோதுமை  தோசைக்கு மாவு கரைச்சு வச்சிருக்கேன். சட்னி பண்றியா சேந்து சாப்பிடலாம்?”

“Ok பா. 5 minutes, I’ll get it done” என்றபடி சமையலறைக்குள் நுழைந்தாள்.

சிறிது நேரத்தில் நான் பின் தொடர்ந்தேன்.

“நாளைக்கு உனக்கு class இருக்காடா?”

“ஆமாம்பா. Special class. Ten to twelve.” Mixieயை ஓட விட்டுக்கொண்டே பதில் சொன்னாள்.  ஆணுறை பற்றிய உரையாடலை எப்படித் தொடங்குவது என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஒரு சில நிமிடங்களில் சட்னி தயார். ஆனால் உரையாட நான் இன்னும் தயாராகவில்லை. எனவே, “காலைல marina போலாமா?” எனத் தொடங்கினேன்.

“Marinaவா? ஏம்பா?”

“Sunrise பாக்கலாம். ரொம்ப நாளாச்சுல, அதான். போலாமா?”

“Ok! Why not? But அம்மா?”

“அவ தூங்கட்டும், நம்ம ரெண்டு பேரு மட்டும் போலாம்.”

“Yayy!” என்றாள் முகமலர்ச்சியுடன். வழக்கமாக அம்மா உடன் வந்தால் ‘இத செய்யாத, அத செய்யாத, ஏன் இந்த dress போடுற, ஏன் அப்படி நடக்குற’ என தொணதொணவென தொந்தரவு கொடுப்பாள் – என்னுடன் மட்டும் வந்தால் இந்த தொந்தரவு இருக்காது என்பதால் என்னோடு மட்டும் தனியாக ஊர்சுற்றுவது என்றால் அவளுக்கு அளவற்ற விருப்பம்.

மெல்லிய புன்னகையுடன், “go to bed early tonight. அப்பதான் காலைல சீக்கிரம் எழுந்திருக்க முடியும்.”

“சரிப்பா.”

Adolescent ageல் உள்ள ஆண்கள்/பெண்கள் சட்டென்று எதையும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள். அவர்களது ஒழுக்கத்தைப் பற்றி அவர்களுடனேயே உரையாடுவது என்பது மதில் மேல் நிற்கும் பூனையின் கழுத்தில் ஓசை எழாமல் மணி கட்ட முயற்சிப்பது போன்றது. கணப்பொழுதில் அனைத்தும் கைநழுவி விட வாய்ப்புகள் அதிகம். இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரைப் போல மிகுந்த பொறுமையுடன் தான் இவர்களைக் கையாள வேண்டும் எனத் தோன்றியது. அகல்யா எனது ஒரே மகள். அவளது வாழ்க்கையை நல்ல முறையில் வாழ சரியான வழியை கண்டுகொள்ளக் கூடிய அறிவை அவளுக்கு கொடுக்க வேண்டிய கடமை எனக்கு அதிகமாக உள்ளது. இதில் எங்கே தவறிவிடுவேனோ என்ற பதைபதைப்பு என்னை வாட்டியது. எக்காரணம் கொண்டும் சிறிதும் கோபம் கொள்ளாமல் பொறுமையாய் இந்நிலையைக் கையாள வேண்டும் என்று உறுதி கொண்டேன்.

ஒரு ஆண், ஒரே நேரத்தில் மிகையான உறுதியுடனும் மிகுந்த பயத்துடனும் இருக்க முடியும் என்று நான் இன்றுதான் உணர்ந்தேன்.

Marina!

அதிகாலையில் மிக அழகாகத் தோன்றும் கடற்கரை. ஏனோ மாலையில் கூடும் கூட்டம் காலையில் கூடுவதில்லை. பொன்னிற வானம், அன்றைய தினத்தின் முதல் ஒளிக்கீற்று, அமைதி, அலையோசை – சென்னை வாழ் மக்கள் தினசரி காலையை கடற்கரையில் கழிக்காமல் தங்கள் வாழ்வின் சில முக்கியமான தருணங்களை தினமும் இழந்து கொண்டு இருக்கின்றனர்.

குறைந்தது பத்து பதினைந்து நிமிடங்கள் நானும் அகல்யாவும் கடற்கரையில் மௌனமாகவே அமர்ந்திருந்தோம்.

“Feels so peaceful பா…” என அகல்யா மௌனத்தைக் கலைத்தாள்.

“ம்ம். அதனாலதான் சில முக்கியமான முடிவு எடுக்குறதுக்கு இந்நேரத்துல இங்க வந்துடுவேன். இன்னைக்கும் அதுக்குத்தான் உன்ன இங்க கூட்டிக்கிட்டு வந்தேன்.”

சற்று குழப்பத்துடன் அகல்யா “என்னாச்சுப்பா? உனக்கும் அம்மாவுக்கும் ஏதும் சண்டையா?” என்றாள்.

அவள்புறம் திரும்பி சிறு புன்னகையுடன் இல்லை எனத் தலையசைத்தேன்.

“Then what’s the issue பா?”

“…”

“…”

எனது சட்டைப்பையில் இருந்து காகிதம் கொண்டு மடித்து வைக்கப் பட்டிருந்த ஆணுறையை அவளிடம் கொடுத்தேன். “இது உன் bagல இருந்ததுனு அம்மா நேத்து எங்கிட்ட குடுத்தா.”

பார்த்தவுடன் அவளுக்கு அது என்னவென்று புரிந்து விட்டது. “Oh god! No no…” என்றபடி கைகள் கொண்டு தன் முகத்தை மூடிக்கொண்டாள். “I’m so sorry  ப்பா. I… I can explain.” பதற்றத்தில் அவள் விரல்கள் நடுங்கியது, வாய் குழறியது.

“You better do!”

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு அகல்யா தொடர்ந்தாள். “இது என்னோடது இல்லப்பா. பூர்ணியோடது ப்பா. I’ll show you somethingனு சொல்லி நேத்து class ஆரம்பிக்க முன்னாடி என் tableக்கு வந்து காமிச்சாப்பா. Suddenly miss உள்ள வந்ததும் என் bagல மறைச்சு வச்சுட்டு class முடிஞ்சதும் எடுத்துக்குறேன்னு சொல்லிட்டு போனாப்பா. ஆனா கடேசில அவளும் மறந்துட்டா, நானும் மறந்துட்டேம்பா. சத்தியமா இதாம்பா நடந்தது. வேற ஒன்னும் இல்லப்பா.”

“…”

“நா உங்க பொண்ணுப்பா. எந்த தப்பும் பண்ண மாட்டேம்பா” என்று தலையைக் குனிந்து கொண்டாள்.

பல நாட்களில், ஏன் பல ஆண்டுகளில், என் மகள் முதல் முறையாக என்னிடம் பொய் சொல்கிறாள். வாக்கியத்துக்கு வாக்கியம் அப்பா அப்பா என்று அழைக்கிறாள், சத்தியம் செய்கிறாள், எப்பொழுதும் என்னிடம் ஒருமையில் பேசுபவள் இன்று ‘உங்க’ பொண்ணு என்று சற்று மரியாதை எற்றிச் சொல்கிறாள், பேசும் பொழுது வழக்கத்துக்கு மாறாக கைகளை ஆட்டிக் கொண்டு, படபடவென்று அளவுக்கு அதிகமாக கண்களைச் சிமிட்டுகிறாள் – இவை அனைத்தும் அவள் கூறியது பொய்யே என்று உறுதியளித்தன. பொய் சொல்கிறாய் என்று அவளிடம் வாதாடலாம்தான். ஆனால் அகல்யா தேவகியைப் போல மிகவும் பிடிவாதக்காரி. அவளைப் போல் என்ன, அவளையும் விட ஒரு படி அதிகமான பிடிவாதக்காரி. தான் சொன்ன அனைத்தும் உண்மையே என்று ஒற்றைக் காலில் நிற்பாள். அவள் கூறிய அனைத்தையும் நம்பியது போன்றுதான் பேசியாக வேண்டும்.

ஒரு சிறு புன்னகை உதிர்த்து நான் தொடர்ந்தேன், “எனக்கு உன்னப் பத்தி தெரியாதாடா. நான் உன்ன திட்றதுக்காக இங்க கூட்டிக்கிட்டு வரல. பேசுறதுக்காகத்தான் கூட்டிக்கிட்டு வந்தேன்.”

“…”

“எப்ப உனக்குனு தனி room கொடுத்தோமோ அப்பவே நீ பெரிய பொண்ணா வளர ஆரம்பிச்சுட்டனு புரிஞ்சுக்கிட்டேன். என்னைக்கு நீ வயசுக்கு வந்தியோ அன்னைக்கே உங்கிட்ட sex education பத்தி உங்கம்மாவ பேசச் சொன்னேன். சும்மா கெடங்க, சின்ன புள்ளகிட்ட போயி அதெல்லாம் பேசிக்கிட்டுனு என்னைய அடக்கி வச்சுட்டா. சரி, உங்க schoolலயாச்சும் ஏதாவது கத்துக் குடுப்பாங்கனு பாத்தா PTA meetingல sexன்ற வார்த்தைய கேட்ட உடனேயே ஆளாளுக்கு மூஞ்சிய சுழிச்சாங்க – என்னமோ அவங்க யாருக்குமே இது புடிக்காத மாதிரி. நான் என்ன கொலை பண்ணவா கத்துக்குடுக்க சொன்னேன்?! Idiots.”

“…”

“நேத்து உன் bagல condomஅ பாத்ததுக்கு அப்புறமா தான் முடிவு பண்ணினேன், உங்கிட்ட நானே நேரடியா தான் பேசி ஆகணும்னு.”

“…”

“பதினஞ்சு பதினாறு வயசுல sex பத்தின உணர்வுகள் ஆசைகள் வர்றது தப்பில்ல. வரணும். வராட்டினா தான் தப்பு. நீ இன்னைக்கு இருக்குற இதே மனநிலைல உனக்கு முன்னாடி பல கோடி பெண்கள்/ஆண்கள் இருந்திருக்காங்க – நான் உங்கம்மா உட்பட. பல லட்சம் வருசங்களா மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைஞ்சு வந்தாங்கனு படிச்சிருக்க இல்லியா? அப்ப இத்தனை வருசங்கள்ல எத்தனை ஆயிரம் கோடி பேர் பிறந்து வாழ்ந்திருப்பாங்க? அவங்க எல்லாருக்கும் sex பத்தின நினைவுகள் உணர்வுகள் இருந்து தான இருக்கும்? அப்போ உனக்கும் sexual thoughts இருக்குறது என்ன தப்பு இருக்கு? சரிதான?!”

“…” இவ்வளவு நேரமாக குனிந்த தலையை நிமிர்த்தினாள். இன்னும் என் முகத்தைப் பார்க்கவில்லை. தொலைவில் அலைகளையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மௌனத்தைக் கலைத்து அவளை உரையாட வைக்க வேறு யுக்தியை கையாள வேண்டும்.

“Before going further, நான் இப்ப உங்கிட்ட ஒரு request வைக்குறேன். செய்வியா?”

“…”

“அடுத்த கொஞ்ச நேரத்துக்கு என்னைய உங்கப்பாவா நினைக்காம ஒரு friendஆ நினைச்சு எங்கிட்ட நீ பேசணும். முடியுமா?”

“…”

“சொல்லு அகல், பேச முடியுமா?”

“No பா! How can I? I’m so embarrassed…”

“அப்பாவா நினைக்குறதால தான் இப்படித் தோணுது. நண்பனா நினைச்சுப் பாரு.”

“…”

அவள் எண்ணத்திற்கு எதிர்மறையாக ஏதாவது பேசினால் வாதாட தொடங்கி விடுவாள். ஒருவேளை இது எனக்கு கைகொடுக்கக் கூடும். தொடர்ந்தேன்.

“To be honest, என்னைய விட ஒரு best friend உன் lifeல யாருமே உனக்கு அமைய மாட்டாங்க தெரியுமா? I can prove it!”

“How?” சட்டென்று எதிர் கேள்வி தொடங்கியது. மனதிற்குள் லேசாக சிரித்துக் கொண்டேன்.

“Best friendடோட primary quality என்ன?”

“என்ன?”

“Unconditional love!”

“அதுக்கென்ன? My friends love me unconditionally!”

“நிச்சயமா இல்ல.”

“How do you know?”

“இப்போ, நீ உன் friends கிட்ட நல்லா சிரிச்சு பேசி பழகலைனா அவங்க உங்கிட்ட பேசுவாங்களா? இல்லையே! So, அவங்க உன்னோட friendsஆ இருக்கணும்னு நினைக்குறதுல நீயும் பதிலுக்கு அவங்களோட நல்ல friendஆ இருக்கணும்ங்குற expectation இருக்கே! ஆனா எங்கிட்ட நீ நல்லா பேசுனாலும் பேசாட்டாலும் நீ சந்தோசமா இருக்கணும்னு மட்டும்தான் நான் நினைப்பேன். இப்ப சொல்லு, என்ன மாதிரி ஒரு friend உனக்கு கிடைக்குமா?”

“…”

பேசாமல் இருந்தவள் பேசத் தொடங்கி விட்டாள். என் வாதம் அவளுக்கு சரியெனப் படவே மௌனம் காக்கிறாள். இனி நான் எண்ணியதைப் பற்றி பேசி விடலாம்.

“சரி, ஒரு கேள்வி கேக்குறேன். மனசுல பட்டத தயங்காம சொல்லு. குழந்தை பெத்துக்க சரியான வயசு என்ன?” என ஆரம்பித்தேன்.

சில நொடிகள் சிந்தனைக்குப் பின் “22க்கு மேல…”

“ஏன்?”

“At the earliest 21ல தான கல்யாணம் பண்ணலாம்? அப்ப 22+ல தான குழந்தை பெத்துக்க முடியும்?”

“Ok. அப்போ sexually active ஆக சரியான வயசு என்ன?”

“21…?!” சந்தேகமும் கேள்வியும் கலந்த தோரணையில் சற்று நீட்டமாக உரைத்தாள்.

மெல்லிய புன்னகை உதிர்த்து பின் தொடர்ந்தேன், “நான் சொல்றத கவனமா கேளு, நல்லா ஞாபகம் வச்சுக்கோ. Having sex and rearing child are two very different things.”

அலைகள் பக்கம் இருந்த அவள் முகம் என் பக்கம் மெல்லத் திரும்பியது. ஓரக்கண்ணால் என் புறம் நோக்கினாள்.

“எப்ப உனக்கு periods வர அரம்பிச்சதோ அப்பவே இயற்கை உங்கிட்ட மறைமுகமா சொல்ற விசயமே இதுதான் – that you are ready to have a child – biologically!”

ஒரு நொடி என் கண்களை நேராய் பார்த்து பின் தரையை உற்று நோக்க ஆரம்பித்தாள். நான் சொல்வதை அவள் கவனிக்கத் தொடங்கியது புரிந்தது.

“நான் biologicallyன்ற wordஅ கொஞ்சம் அழுத்தமா சொன்னேனே கவனிச்சியா?”

ஆம் என்பது போல் மெதுவாகத் தலையசைத்தாள்.

“அதுக்கு ஒரு காரணம் இருக்கு. எப்படி biologically ready ஆகுறது அவசியமோ அதே போல இன்னும் சில -allyகள்லயும் ready ஆகணும். உதாரணத்துக்கு, physically, emotionally, morally இப்படி. இன்னும் முக்கியமான ரெண்டு -ally இருக்கு, அத பத்தி அப்புறமா சொல்றேன்.”

“…”

“இந்த வயசுல sexual activities பழகுறது தப்புனு சொல்ல மாட்டேன். ஆனா அது incompleteனு சொல்லுவேன். ஏன் incompleteனு தெரியுமா?”

“இல்ல..”

“சொல்றேன். Having sex – இத வேற எப்படி எல்லாம் சொல்லலாம்?”

“வேறனா? What do you mean?”

“For ex, matter பண்றது. இத மாதிரி வேற எப்படி சொல்லலாம்?” – கேட்டவுடன் களுக்கென்று சிறியதாக சற்று சிரித்து விட்டாள். “சிரிக்காத, சொல்லு. வேற எப்படி விவரிக்கலாம்?”

“Sleeping together…”

“வேற?”

“Having coitus…”

“வேற?”

“…fucking”

“வேற வேற?”

சிறிது நேரம் யோசித்து விட்டு “வேற ஒன்னும் தோணலையே” என்றாள்.

“நல்லா யோசி. நான் எதிர்பாத்த வார்த்தை இன்னும் வரலை.”

என்புறம் திரும்பி பார்த்துக் கொண்டு, “I know, கள்ளக்காதல் தான?” என்றாள்.

கடகடவென நான் சிரிக்கத் தொடங்கினேன். “உன் மனசுக்குள்ள இந்த வயசுல பண்றது தப்புனு நினைப்பிருக்கு. அதான இப்படி சொல்ற?”

“இல்லப்பா. நீ தான் என் வாய கிளறி எங்கிட்ட இருந்து வார்த்தைய பிடுங்குற.” மீண்டும் எனை ஒருமையில் அழைக்கத் தொடங்கி விட்டாள். நல்லது!

“சரி, வேற எப்படி சொல்லலாம்?”

“தெரியலப்பா, நீயே சொல்லு.”

“Making love!”

“சே! How did I miss that?” ஒரு துளி ஆச்சரியம் கலந்து தனக்குத் தானே கேள்வி எழுப்பிக் கொண்டாள்.

“கள்ளக்காதல புடிச்சிட்டு காதல விட்டுட்டியே…”

குறும்பாக சிரித்துக் கொண்டாள்.

“உடலுறவு யாரு கூட நடந்தாலும் அனுபவிக்க நல்லாதான் இருக்கும். ஆனா அதே உடலுறவு காதலோட இணைஞ்சு நடந்தா ஆயிரம் மடங்கு அதிகமா நல்லா இருக்கும். இரண்டு விதத்துலயும் அனுபவிச்சவன்ற முறையில சொல்றேன், இது தான் உண்மை!”

“ரெண்டு விதத்துலயுமா? You had an affair?”

“உங்கம்மாவ பாக்க முன்னாடி collegeல வந்த first crush அது. ரொம்ப நாள் நீடிக்கல!”

“அம்மாவுக்கு தெரியுமா?”

“ம்ம் தெரியும்…”

“யார் அவங்க? அவங்க பேர் என்ன?”

“கல்கி. என்னோட batchmate.”

“அங்கள எப்படி meet பண்ணின? எத்தனை நாள  பழக்கம்? I wanna know everything.”

இந்தப் பெண்களுக்குத்தான் பிறர் விசயங்களை அறிந்து கொள்ள எத்தனை ஆர்வம்! “இன்னைக்கு நாம பேச வந்தது உன்னைப்பத்தியும் உன் bagல இருந்த condomஅ பத்தியும் தான். பேச்ச மாத்த வேண்டாம், சரியா?”

“சரி” அவள் பேச்சில் ஆர்வம் குறைந்தது.

“ஆக, உண்மையான காதல அடைஞ்சதுக்கு அப்புறமாதான் sexஓட full potentialலை உன்னால அனுபவிக்க முடியும். But, அப்படி ஒரு ஆழமான காதல அடையுறதுக்கு உனக்கு இன்னும் நிறைய அனுபவம் வேணும். இதனாலதான் இந்த வயசுல உன்னோட sexual adventures எல்லாம் incompleteனு சொன்னேன்.”

“ம்ம்” என்று தலையசைத்தாள்.

“நடக்க, ஓடப்பழகின உடனே யாரும் marathon ஓடுறதில்ல. ஓடவும் கூடாது. அதுக்கு உடலையும் மனதையும் தயார் படுத்திக்குறது அவசியம். Car ஓட்டப் பழகின உடனே formula racingக்கு போக முடியாது. அதுக்கு பயிற்சி அவசியம். இதுவும் அப்படித்தான். Biologically ready ஆகிட்டதால உடனே உடலுறவு வச்சுக்கக் கூடாது. மத்த -allyக்கள்லயும் ready ஆகணும்.

உன்னோட உடல்ல உணர்வுகள்ல உண்டாகுற மாற்றங்களயே இப்பதான் நீ புரிஞ்சுக்க ஆரம்பிச்சுருக்க. அதுக்குள்ள அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துடாதனு எடுத்துச் சொல்லத்தான் உன்ன இங்க கூட்டிக்கிட்டு வந்தேன். ஏன்னா ஒவ்வொரு முறையும் உடலுறவு கொள்றப்ப அது உளவியல் முறையா ஒரு பெரிய தாக்கத்த உண்டு பண்ணும். உன்னோட வயசுல உள்ளவங்களுக்கு அந்த தாக்கம் அதிகமாவே இருக்கும். உன்னோட உடலுக்கும் மனசுக்கும் எல்லைகள் என்னனு தெரிஞ்சுக்க முன்னாடியே தவறான எட்டு எடுத்து வச்சிடாத. You get what I’m saying?”

“…” ஆமென்று தலையசைத்தாள்.

“Sexual thoughts வர்றது தப்பில்லனு தெரிஞ்சுக்குறது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது இந்த உணர்வுகளுக்கு ஒரு வடிகால் அமைக்குறது. அதுக்கு பல வழிகள் இருக்கு. அதைப்பத்தி இன்னொரு நாள் பேசலாம். என்ன?”

“ம்ம்ம்”

இன்று ஒரு நாளிற்கு இவ்வளவு பேசியது போதும் என்று தோன்றியது. அதனால் சற்று நேரம் மௌனம் காத்திருந்தேன்.

அகல்யா தொடர்ந்தாள். “ப்பா…”

“என்னடா?”

“…”

“எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு. I told you, I’m your best friend.”

“I’m sorry பா. நா உங்கிட்ட உண்மைய சொல்லிடுறேன். இந்த condom எனக்கு பூர்ணி கொடுக்கல.”

எனக்குத் தெரிந்த ஒன்றுதான். உண்மை அவளிடம் இருந்து தானாக வரட்டும் என்றுதானே இவ்வளவு நேரம் மெனக்கெடுத்தேன்!

“ஓ. அப்ப யார் குடுத்தது?”

“ஆதித்யா.”

அவன் பெயரைக் கேட்டதும் என் நரம்புக்ளில் கோபம் ஏறத் தொடங்கியது. ஆதித்யா அவள் வகுப்பில் படிக்கும் சகமாணவன். ஆதித்யாவின் தந்தை ஒரு textile millன் owner. கோவையிலும் சென்னையிலும் அவருக்கு சில துணிக்கடைகளும் சொந்தம். எங்களை விட நான்கைந்து மடங்கு அதிகமாக பணவசதி படைத்த குடும்பம். அதிலும் குறிப்பாக மூன்று தலைமுறைகளாகவே செல்வந்தர்கள். சிறு வயதே ஆனாலும் ஆதித்யாவின் பேச்சில் எப்பொழுதும் ஒரு இளக்காரம் தென்படும். தன் வகுப்பிலேயே பல மாணவர்களை தன் வேலைக்காரர்கள் போல் நடத்துபவன் – இது அவன் தவறு அல்ல, வளர்ப்பு அப்படி.

கோபத்தைக் கட்டுப் படுத்த சில நொடிகள் ஆனது. அதற்குள் அகல்யா தொடர்ந்தாள். “ஆதித்யா பாக்கதான் கொஞ்சம் aggressiveஆ தெரிவான். But he is very sensitive. உன்ன மாதிரியே அவனும் ரொம்ப நல்லவன் ப்பா.”

என் கோபம் இன்னும் இரண்டு அடுக்குகள் அதிகமானது. என் மகள், ஒரு தறுதலையை என்னுடன் ஒப்பிடுகிறாள்.

“You know, அவன் என்னைய kiss பண்ண ரெண்டு மூனு chance இருந்தும், kiss பண்ணல. He was waiting patiently until I kiss him.”

…was waiting என்று இவள் கூறியதைக் கேட்டு சற்று நொறுங்கித்தான் போனேன். ‘ஒத்த பொண்ணுனு செல்லம் குடுத்தீங்களே’ என்று தேவகி நேற்று அழுதது காதில் ஒரு முறை எதிரொலித்தது. காலம் கடந்து இவளிடம் பேசுகிறேனோ என்ற அச்சம் சூழ்ந்தது. என் கோபம் வருத்தம் ஏமாற்றம் இவற்றையெல்லாம் மிகுந்த சிரத்தை கொண்டு ஒதுக்கி வைத்து விட்டு இயல்பாக பேசத் தொடங்கினேன் – இயல்பாக பேசுவது போல் நடிக்கத் தொடங்கினேன் என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும். என் மகள் என்னை நம்பி என்னிடம் பேசத் தொடங்கி இருக்குறாள். நான் கோபத்தை வெளிக்காட்டி இந்நிலையை கெடுக்க விரும்பவில்லை. தொடர்ந்தேன் “அது இருக்கட்டும், அவன் ஏன் உங்கிட்ட condom குடுத்தான்?”

“Because he wants to be with me. அவன் இத எங்கிட்ட குடுத்துட்டு என்ன தெரியுமா சொன்னான் – I love you and I want to sleep with you. I won’t force you. I’ll wait until you are completely okay with doing this. அது வரைக்கும் இந்த condom உங்கிட்டயே இருக்கட்டும், as a proof that I’m patiently waiting for you.”

எவ்வளவு அழகாக குற்றவுணர்ச்சி எனும் ஒரு பெரும் பாரத்தை என் மகள் தலையில் சுமத்தியிருக்கிறான். இப்படியெல்லாம் பேச இவனுக்கு யார் கற்றுக் கொடுத்திருப்பார்களோ தெரியவில்லை. இதைக்கூட புரிந்து கொள்ள முடியாத ஒரு மடச்சியாய் என் மகள் இருக்கிறாளே! இருக்கட்டும், வழக்கம் போல் மன்னித்து விடுகிறேன்.

எனினும் இப்படியான ஒரு முதல் தர மொள்ளமாறியை என் மகள் என்னோடு ஒப்பிடுகிறாள் என்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை தான். இவன் ஒரு கயவன் என என் மகளுக்கு உணர்த்த மீண்டும் இவளின் வாதாடும் குணமே எனக்குக் கை கொடுக்கக் கூடும். “அகல், நீ அந்தப் பையன sensitive, நல்லவன்னு எப்படி சொல்ற?”

“எப்படினா? I just told you ப்பா. He is waiting for me to decide. என் உணர்வுகளுக்கு மதிப்பு குடுத்து, என்ன force பண்ணாம, எனக்காக காத்திருக்கேன்னு சொல்றான். இன்னும் உனக்கு வேற என்ன proof வேணும்?”

“நீ எத sensitiveனு சொல்றியோ நான் அத crookedனு நினைக்குறேன்.”

“Crooked? No no no no. He is anything but crooked.” அவளது குரல் உயர்ந்தது.

“அப்ப சரி, என்னோட கேள்விக்கு பதில் சொல்லு. அப்படி உண்மையிலேயே அவன் உனக்காக காத்திருக்கான்னா, ஏன் அவன் இந்த condomம தன்னோடயே வச்சுக்கல? ஏன் உங்கிட்ட குடுத்தான்?”

“அது…வந்து…he wants to prove that he gives me importance and he is waiting.”

“அதான் சொல்லிட்டான்ல? அப்புறம் இதை உங்கிட்ட குடுக்கணும்னு என்ன அவசியம் இருக்கு?”

“…” அவளிடம் பதில் இல்லை.

“நான் சொல்லட்டுமா ஏன்னு? ஏன்னா, தினம் தினம் நீ இந்த condomம பாக்குறப்பலாம் அவன் உங்கூட படுக்க ஆசைப்படுறான், உனக்காக அந்த ஆசைய கட்டுப்படுத்தி வச்சிருக்கான்ற guilty feeling உனக்கு வரணும்னு தான். இது தன்ன ஒரு தியாகியாவும் உன்ன ஒரு குற்றவாளியாவும் சித்தரிக்குற முயற்சி இல்லைனா வேற என்ன?”

மௌனமாக இருந்தாள். “என்னால உன் explanationஅ ஒத்துக்க முடியாதுப்பா. நீ வார்த்தைய வளைச்சு பேசுற.”

வார்த்தையை வளைத்து பேசுவதென்றால் என்னவென்று யோசித்துக் கொண்டிருந்தேன். அந்த இடைவெளியில் அவள் தொடர்ந்தாள், “நீ வேணும்னே என்ன குழப்பப் பாக்குற. மத்த அப்பாக்கள் மாதிரி நீயும் முடிவெடுக்காதப்பா. நீ modern அப்பா, I hope you’ll be able to understand your daughter better.”

என்னிடமே தன் பேச்சாற்றலைக் காண்பிக்க முயற்சிக்கிறாள். மீண்டும் மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.

“சரி, let’s agree to disagree. உன் பார்வையில அவன் நல்லவனா தெரியுறான், என் பார்வையில அவன் கெட்டவனா தெரியுறான். இந்த ரெண்டுல ஏதாவது ஒன்னுதான் உண்மையா இருக்க முடியும். ஒரு test வச்சு அவன் நல்லவனா கெட்டவனானு கண்டு புடிச்சுக்கலாம். But, அதுவரைக்கும் நீ limitக்குள்ள இருப்பனு எதிர்பாக்குறேன். That means, no alone time with him!”

“Come on ப்பா, that’s not fair.”

“Not fair? Think long term அகல். 15 வயசுதான் ஆயிருக்கு உனக்கு. ஒரு வேளை இவன் நல்லவனா இருந்தா வருங்காலத்துல நீ இவனயே கல்யாணம் பண்ணப் போற. குறைஞ்சது 50-60 வருசம் இவனோட வாழப்போற. இவன் நல்லவனானு பரிசோதிச்சு பாக்க ஒரு 5-6 மாசம் wait பண்ண மாட்டியா?”

“6 மாசம் அவனோட பேசாம இருந்தா நான் அவன மறத்திருவேன்னு நினைக்குறல? இது too much ப்பா”

“நான் எப்படா அவன்ட்ட பேசாதனு சொன்னேன். No ALONE timeனு தான சொன்னேன்? Classல அவன பாத்தா தாராளமா பேசு, பழகு. தனியா சந்திக்காதனு தான் சொல்றேன்.”

“சரி.” என்று அரை மனதோடு சம்மதம் சொன்னாள்.

“Come, let’s have breakfast and head home.”

உணவு உண்டு முடிக்கும் வரை மிக பலமாக எதையோ யோசித்துக் கொண்டு இருந்தாள். வேறு எந்த உரையாடல்களிலும் ஆர்வமற்றே இருந்தாள். வீடு திரும்பிச் செல்லும் வழியில் தொடர்ந்தேன், “என்ன இவ்வளவு deep thinking? அவன நல்லவன்னு prove பண்ண அவனுக்கு என்ன training குடுக்கலாம்னு யோசிக்குறியா?”

“…”

“அகல்?”

“ம்ம்…இல்லப்பா.” இன்னும் யோசனையில் மூழ்கியிருந்தாள்.

“என்னடா ஆச்சு?”

“Actually நீ சொன்னதுலயும் ஒரு point இருக்கத்தான் செய்யிது.”

“என்ன?”

“அவன் என்ன ஏமாத்தணும்னு நினைக்குறான்னு சொன்னல? அதுக்கு may be less than one percent chance இருக்கலாம்னு தோணுது.”

“அப்போ அவனுக்கு test வச்சு பாத்துரலாமா?”

“Sure. But என்ன test?”

“Let me think!” சிந்திக்கத் தொடங்கினேன்.

தான் முத்தமிட வாய்ப்பிருந்தும் கொடுக்காமல் இவளாய் முன்வந்து கொடுப்பதற்காகக் காத்தருக்கிறான். எப்படியும் இவளை முத்தமிட வைத்து விடலாம் என்ற நம்பிக்கை காரணமாய் இருக்கக்கூடும். இந்த முறை தவற விட்டால இனி இவளோடு உறவு கொள்ள வாய்ப்பே இருக்காது என்ற எண்ணம் அவனுக்கு வந்தால் அவனது உண்மைச் சுயரூபம் வெளிப்படக்கூடும். இதைத்தான் பரிசோதனையின் மையமாக வைக்க வேண்டும்.

“அடுத்து அவன எப்ப தனியா சந்திக்குறதா இருந்த?”

“இன்னிக்கு 10-12 special classனு சொன்னேன்ல, அது அவனோட combined study பண்றதத்தான் சொன்னேன்.”

அவள் புறம் திரும்பி முறைத்துப் பார்த்தேன்.

“நீ தான் no alone timeனு சொல்லிட்டியே. அதனால போக மாட்டேன்.”

“இப்படிப் பண்ணலாம் அகல்யா. நீ இன்னைக்கு அவனோட combined study பண்ணப் போ. போனதும் அவங்கிட்ட நான் சொல்ற மாதிரி சொல்லு. ‘நீ குடுத்த condomஅ வீட்ல பாத்துட்டாங்க. காலைல fullஆ வீட்ல பயங்கர சண்டை. எங்கப்பா அவரு companyயோட புனே officeக்கு transfer வாங்கிட்டாரு. Monday schoolல tc apply பண்ணிட்டு, next weekendஏ நாங்க புனேவுக்கு மாறிப்போறோம்’ அப்படினு சொல்லு.”

“அப்படி சொன்னா?”

“சொன்னா, அவனுக்கு உன்னோட உறவாடணும்ன்ற எண்ணம் மட்டும்தான் இருக்குதுனா உடனே அதை செயல்படுத்துற முயற்சில ஈடுபடுவான். இல்ல உண்மையிலேயே உன்ன காதலிக்குறான்னா, உனக்காக காத்திருக்க நான் தயார், let’s stay in touchனு சொல்லி உன்ன வழியனுப்பி வைப்பான்.”

“Sounds like a plan. ஆனா அவன் இந்த ரெண்டுல ஏதாவது ஒரு வகைல தான் behave பண்ணுவான்னு எப்படி சொல்ற?”

“இந்த ரெண்டும் ரெண்டு extreme. ஒன்னு 100% sex, இன்னொன்னு 100% love. இந்த ரெண்டுக்கும் நடுவுல அவன் எங்க வேணா இருக்கலாம். அவனோட reactionஅ வச்சு அவன் இந்தப்பக்கமா இல்ல அந்தப்பக்கமானு உனக்கு ஓரளவு புரிஞ்சிடும். அதுக்கப்புறமும் தேவைப்பட்டா இன்னும் ஒன்னு ரெண்டு test கூட வச்சுக்கலாம்.”

சம்மதித்தாள்.

சுமார் பத்து மணியளவில் அகல்யா வீட்டிலிருந்து கிளம்பினாள்.

“அவன் வீட்டுக்குள்ள போக முன்னாடி எனக்கு call பண்ணிட்டு போ. சரியா பத்து நிமிசம் கழிச்சு நான் உனக்கு call பண்றேன். அதுக்குள்ள அவன்கிட்ட விசயத்த சொல்லிட்டு அவன் reactionஅ கவனி. பிரச்சனை பண்ணினான்ன அடுத்த ரெண்டு நிமிசத்துக்குள்ள நான் அங்க இருப்பேன். சரியா?” என்றேன்.

“Okப்பா” என்று தன் மிதிவண்டியேறிச் சென்றாள்

அவள் சென்றதும், “என்னங்க இப்படி பண்றீங்க. இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால்ல” என்று தொடங்கினாள் தேவகி. Marinaவில் இருந்து வந்தவுடன் தேவகியிடம் அகல்யாவுடன் பேசினதையும்  நாங்கள் முடிவெடுத்துள்ள பரிசோதனை பற்றியும் கூறியிருந்தேன். தேவகிக்கு இதில் சிறிதும் உடன்பாடில்லை. இருப்பினும் என் சொல்லுக்கு இணங்கி அமைதியாய் இருக்கிறாள்.

“பயப்படாத தேவா, நம்ம பொண்ணு நம்மகிட்ட மீண்டு வரணும்னா அவளே முடிவெடுத்து வரணும். நாம force பண்ணி அவள அடக்கி வச்சா அவ என்னைக்காவது ஒரு நாள் மறுபடியும் எல்லை மீறித்தான் போவா. உனக்கு அதுவா வேணும்?”

“இல்ல! இருந்தாலும் எனக்கு ரொம்ப பதறுது. இடது கண்ணு வேற துடிக்குது. இடது காலும் ஊறுது. நிச்சயமா ஏதோ தப்பு நடக்கப் போகுது. அதான் பயம்மா இருக்கு…”

“நான் இருக்கேன்ல. தப்பு எதுவும் நடக்காம நான் பாத்துக்குறேன். நீ தைரியமா இரு.”

“…”

“சரியா?”

“ம்ம்” சன்னமாக ஒலித்தது தேவகியின் குரல்.

பத்து நிமிடம் ஆகியிருந்தது. அகல்யாவிற்கு அலைபேசி அழைப்பு விடுத்தேன். அவள் எடுக்கவில்லை. இரண்டாவது முறை அழைத்தேன். எடுக்கவில்லை.

தேவகியின் இடது கண் துடிப்பும் இடது கால் ஊறலும் ஞாபகம் வந்தது. ஆதித்யாவின் வீடு எங்கள் வீட்டிலிருந்து ஏறத்தாழ ஒரு கிமீ தொலைவில் இருக்கும். உடனே எனது வண்டியை கிளப்பி வேகமாய் பறந்தேன். ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் அடைந்தேன். வந்த வேகத்தில் வண்டி கிறீச்சிட்டு நின்றது. சரியாக அதே நேரத்தில் அகல்யா கதவைத் திறந்து வெளியே ஓடி வந்தாள். ஆதித்யா தன் வீட்டு வாசலில் நின்றபடி அகல்யா வெளியேறுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அகல்யாவின் கண்களில் சிந்தியும் சிந்தாமலும் கண்ணீர் தென்பட்டது. அவள் வண்டியுள் ஏறிய பின்பு அவள் கையில் நகக்கீரலைப் பார்த்ததும் என் இதயம் ஒரு கணம் நின்று பின் இயங்கியது. இனியும் இவனை விட்டுவைக்கக் கூடாது என நினைத்து நான் கீழே இறங்கினேன். கதவை மூடும் வேளையில் அகல்யாவின் விசும்பல் என் காதுகளை வந்தடைய, ஆதித்யாவை அருகில் வரும்படி அழைத்தேன். தயங்கித் தயங்கி அருகில் வந்தான். அவன் கன்னத்தில் மூன்று விரல் தடங்கள் மெல்லியதாய் தென்பட்டது. மனதிற்குள் சபாஷ் அகல்யா என்று கூறிக்கொண்டேன்.

“ஆதித்யா, இந்த roadல right எடுத்து ரெண்டு தெரு தாண்டி left எடுத்தா 4th cross street வரும்ல…” நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரியாமல் குழம்பிய படி தலையாட்டினான்.

“ஆ…ஆமா uncle…”

உறுதியான குரலில் “Don’t call me uncle. I’m not your uncle.” என்றேன்

“ச…ச…sorry sir”

“ம், அந்த streetல தான மகளிர் காவல் நிலையம் இருக்கு?”

“Yes unc…sir, yes sir…”

“அங்க inspector முத்துலட்சுமி என்னோட school mate. அவங்களுக்கு இன்னிக்கு birthday. நீ எங்க கூட வாயேன், நாம போய் அவங்கள wish பண்ணிட்டு வருவோம்.…”

அவன் முகத்தில் பயம் பரவுவதை நன்கு உணர முடிந்தது. நா வரண்டு எச்சில் விழுங்கினான். “இ…இல்ல sir, நான் வர்ல…வீட்ல நி…நிறைய படிக்க வேண்டி இருக்கு…எ…exam வருது, I’m…I’m gonna study…sir” திக்கித்திணரி மெதுவாய் பேசினான்.

“என்ன சொன்ன? சரியா கேக்கல”

“Exam…நிறைய படிக்கணும்…படிக்கப் போறேன்”

“ம்ம். படிக்கணும்! இப்பதான் உனக்கு படிக்கணும்னு தோணும்ல?”

என் கண்களை நேராய்ப் பார்க்கத் தயங்கி தரை நோக்கினான்.

“உன் parents இருக்காங்களா? எங்க அவங்க?”

“அவங்க வெளிய போயிருக்காங்க…வர evening ஆகும்…இல்ல, ஒன்னு ரெண்டு நாளாகும்…”

“சரி, அவங்க வந்ததும் நாம எல்லாரும் ஒன்னா சேந்து inspectorஅ பாக்கப் போகலாம். பிறந்தநாள் பரிசு குடுத்துட்டு வரலாம்.” என்று கூறிவிட்டு ஓரடி அவன் அருகில் சற்று கனத்த குரலில் மெதுவாக “போவோமா?” என்றேன்.

“இ…இ…இல்ல sir…வேணாம் sir…I’m sorry sir…இனிமே இப்படி நடக்காது sir…” அவன் குரல் தழுதழுக்கத் தொடங்கியது. “please sir…அப்பாக்கு தெரிஞ்சா என்ன கொன்னுடுவாரு sir…please sir…” கண்ணீர் விழத்தொடங்கியது.

“நீ sorry சொல்ல வேண்டியது எங்கிட்ட இல்ல” என்று அகல்யாவின் பக்கம் முகம் திருப்பினேன்.

தலை குனிந்தபடி வாகனத்தின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தாள்.

“I’m sorry அகல்யா.” என்று சுருக்கமாய் முடித்துக் கொண்டான்.

“இதுதான் உன் வாழ்க்கைல நீ எம்பொண்ணு கிட்ட பேசின கடேசி வார்த்தை. இதுக்கப்புறம் உன் மூச்சுக்காத்து அவ மேல பட்டா கூட உன் குடும்பத்தையே கொண்டு போய் உள்ள வச்சுருவேன். புரியுதா?” என்றேன்.

அழுகையோடு அவன் விசும்பலும் அதிகரித்தது.

“புரியுதா?” என்று குரல் உயர்த்திக் கேட்டேன். அழுதுகொண்டே ஆமென்று தலையாட்டினான். “ஓடிப்போ. சூத்தையும் சுண்டக்காயையும் பொத்திக்கிட்டு இருந்தாதான் உனக்கு நல்லது. போ!” என்றேன். கண்களைத் துடைத்தவாரு திடுதிடுவென ஓடி கதவுகளை அறைந்து மூடிக்கொண்டான்.

நான் வண்டியில் மீண்டும் ஏறிக் கொண்டேன். அகல்யாவின் விசும்பல் குறைந்திருந்தது. இன்னும் தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள். சில நொடிகள் அமைதியின் பின் மெதுவாய் அவள் குரல் ஒலித்தது, “I’m sorry ப்பா”

ஆதரவாய் அவளை என் தோளோடு அணைத்து, “This is not your fault.” என்றேன். அழுதே விட்டாள். “ஷ்ஷ்…ஷ்ஷ்…அழாத அகல், இதுல உன்னோட தப்பு எதுவுமே இல்ல. தப்பு பண்ண முயற்சி பண்ணினது அவன். வெட்கப்பட வேண்டியது அவன். அழ வேண்டியது கூட அவன் தான், நீ இல்ல.”

“…”

“I’m so proud of you honey. எத்தன குழந்தைகளால அவங்க அப்பாகிட்ட இப்படி openஆ எல்லாத்தையும் discuss பண்ண முடியும்? எத்தன பெண்களால தன்னயும் மீறி தவறு நடக்க வாய்ப்பிருக்குற சூழ்நிலைலயும், எதிர்த்து போராடி வெளியேற முடியும்?” விசும்பல் குறைந்திருந்தது. கலங்கிய கண்களுடன் தலைதிருப்பி எனைப் பார்த்தாள்.

“அவன் கன்னத்துல உன் கை தடத்த கவனிச்சேன். Awesome! I wish I’d seen that.”

மெலிதாய் புன்னகைத்தாள்.

“You’re growing into a brave young woman already. I’m so so so proud of you!”

“Thanks ப்பா…for everything” என்றாள் என் தோளில் சாய்ந்து கொண்டு.

“சரி வா. நாம் போய் அம்மாவ சமாதானப் படுத்தலாம்.”

“She must be very pissed right now. அதுவும் இப்ப நான் இங்க வந்தது மட்டும் தெரிஞ்சா அவ்ளோதான்”

“அம்மாவுக்கு தெரியும் அகல்”

“What?” அதிர்ந்தாள். “போச்சு, இனி அம்மா எங்கிட்ட பேசவே மாட்டா” என கலங்கினாள். “நீ ஏம்பா அவகிட்ட சொன்ன?”

“மெரினால இருந்து வந்தொடனயே அம்மாகிட்ட நீ இங்க வர்ற plan மொதோக்கொண்டு எல்லாம் சொல்லிட்டேன். அவளுக்கு இந்த plan சுத்தமா பிடிக்கல.”

“Then how did she agree?”

“Because, she TRUSTS me. எனக்காக என் மேல இருந்த நம்பிக்கைனால சம்மதிச்சா. அவளுக்கும் எனக்கும் பல விசயங்கள்ல ஒத்துப்போகாது. இருந்தாலும், நான் எது பண்ணினாலும் அவளுக்கும் உனக்கும் நல்லதுக்காத்தான் இருக்கும்னு அவ நம்புறா. அது தான் உண்மையும் கூட. அதே மாதிரி அவளோட எல்லா செயல்களும் எனக்கு பிடிச்ச மாதிரி இருக்காது. But அவ என்ன செஞ்சாலும் அது எனக்கும் உனக்கும் நல்லதுக்காத்தான் இருக்கும்னு எனக்குத் தெரியும். என் இஷ்டத்துக்கு நான் அவளை வளைக்குறது இல்ல. அவளும் தனக்கேத்த மாதிரி என்னைய manipulate பண்றது இல்ல!

That’s the only point I wanna make you understand today. அவளுக்கும் எனக்கும் இடைய உள்ள நம்பிக்கை தான் நம்ம familyயோட முதுகெலும்பு. அது தான் கணவன் மனைவிங்குற எங்க உறவோட பொருள். அதுதான் எங்க ரெண்டு பேரோட காதல். That trust is our love!

என்னைக்கு உன்னால ஒரு பையன இந்தளவு நம்ப முடியுதோ, என்னைக்கு அதே பையன் உன் மேலயும் இதே அளவுக்கு நம்பிக்கை வைக்குறானோ, அன்னைக்குத்தான் உன்னோட காதல் முழுமையடையும். அப்படி ஒருத்தன் உன் வாழ்க்கைல வந்தான்னா நீ வேற யாரப்பத்தியும் யோசிக்கத் தேவையில்ல. அவனுக்காக நீ என்ன வேணா பண்ணலாம், ஏன்னா அவனும் உனக்காக என்ன வேணா பண்ணுவான். அவனோட ஊர் உலகம் சுத்தணுமா, சுத்து. கல்யாணம் பண்ணனுமா, பண்ணிக்கோ. இல்ல வேணாமா, live in relationshipல தான் இருக்கணுமா, இருந்துக்கோ. குழந்தை பெத்துக்கணுமா, பெத்துக்கோ இல்லாட்டி தத்தெடுத்துக்கோ!

உன்னோட வாழ்க்கை, உங்க ரெண்டு பேரோட வாழ்க்கை அது, நாங்க யாரும் அதுல தலையிட மாட்டோம். But அப்படி ஒரு வாழ்க்கை உனக்கு அமையுற வரைக்கும் உன்னோட lifeல ஒவ்வொரு instanceலயும் உன்ன support பண்ண, உன்ன guide பண்ண நான் உன்கூட இருப்பேன். You can trust me on that. Deal?” என்றேன்.

வைத்த விழி மூடாமல் எனை உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் பார்வை என் மீதான பெருமிதம் கொண்டிருந்தது. விழியோரத்தில் ஆனந்தக்கண்ணீர் சற்று குளம் கொண்டிருந்தது. இதழோரம் மெல்லிய புன்னகையுடன் கூறினாள், “I love you ப்பா. உன்ன மாதிரி ஒரு அப்பா கிடைச்சதுக்கு நான் குடுத்து வச்சிருக்கணும்.”

“உன்ன மாதிரி தைரியமான பொண்ணு கிடைக்க நாங்களும் குடுத்து வச்சிருக்கோம் அகல். We love you too.”

“You’re my hero ப்பா”

ஒரு காதலி தன் காதலனிடம் you’re my hero என்று சொல்வதைப்போல் போதை வேறு ஒன்றும் இல்லை என இதுநாள் வரை நினைத்தேன். ஒரு மகள் தன் தந்தையிடம் அவ்வாறு சொல்வது அதைவிட மேலானது என இன்று உணர்ந்தேன். இது மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே உரித்தான அரிய உணர்வு.

“சரி, நாம போய் அம்மாவ convince பண்ணலாம். பயங்கர கோவத்துலதான் இருக்கா, நாம அம்மாவோட weak point தான் use பண்ணனும்…”

அகன்ற விழிகளோடு என்புறம் திரும்பி ஆர்வமாய் கேட்டாள், “chocolate ice cream?!”

கண்களைச் சிமிட்டி புன்னகைத்தேன். “நேரா கடைக்கு போயி ஒரு கிலோ வாங்கிட்டு போவோம்.”

“ரெண்டு கிலோ வாங்கலாம் ப்பா”

“ரெண்டா?”

“ம்ம்…ஒன்னு அம்மாவுக்கு, ஒன்னு எனக்கு.”

“அப்ப எனக்கு?”

“டப்பா வாங்கினா கூட freeயா ஒரு cup வரும்ல, அத நீ வச்சுக்கோ” என்றபடி சிரித்தாள்.

வீட்டிற்கு வந்து முக்கால் மணி நேரம் ஆயிற்று. தாயிடம் மகள் மன்னிப்புக் கோரி, கெஞ்சிக் கூத்தாடி பேச வைக்க முயன்று, இருவரும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து…ஒரு mega serialன் special episode என் கண்முன் அரங்கேறிக் கொண்டிருந்தது.

கண்ணீருக்கு வலியைக் குறைக்கும் வல்லமை உண்டு. எனவே அவர்கள் அழுதோயட்டும் என விட்டுவிட்டேன். என் பாழாய்ப்போன மனது வேறு அவ்வப்போது ice creamஐ நினைவு கூர்ந்து என் பொறுமையை அழித்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்கெல்லாம் இருவரும் அமைதியாகி இருந்தனர். தேவகியின் மடியில் தலை வைத்து அகல்யா படுத்திருந்தாள். Ice cream டப்பாக்களை எடுத்து வந்து அவர்கள் முன் வைத்தேன். ஆளுக்கொன்றாய் எடுத்துக் கொண்டார்கள். வழக்கம் போல் இலவச cup என்னிடம் வந்தது.

Ice cream டப்பாக்களின் எடை குறையக் குறைய மனதில் உள்ள பாரமும் குறைந்தது. அகல்யா பேசத் தொடங்கினாள், “அம்மா, நீ அங்க இருந்துருக்கணும். அப்பா அவங்கிட்ட பேசப்பேச அரண்டு போயிட்டான்.” என்புறம் திரும்பி “அப்பா, நீ இன்னும் ஒரு நிமிசம் அதிகமா பேசிருந்தா அவன் அங்கயே உச்சா போயிருப்பான்.” சிரித்தாள்.

தேவகி குறுக்கிட்டாள், “இப்ப எதுக்குடி அந்த தறுதலைய பத்தி பேசுற. நிம்மதியா ice cream சாப்பிட விடமாட்டியா?”

“மா…அப்பாவ அப்படிலாம் திட்டாதமா. தப்பு!” என்று கடகடவென சிரிக்கத் தொடங்கினாள்.

“அடிக் கழுத…” என்று தேவகி அடிக்க கை ஓங்க, அகல்யா எழுந்து ஓடினாள். தேவகி அவளைப் பின் தொடர இருவரும் sofaவை இரண்டொரு முறை சுற்றி வந்தனர்.

அகல்யா ஓடிவந்து என்னருகில் உட்கார்ந்து கொண்டு, “பாருப்பா, அம்மா அடிக்க வர்றா…” என்றாள்.

“பச்சப்புள்ளைய அடிக்காதடி…” என்று அகல்யாவை அணைத்துக் கொண்டேன்.

“இவளா பச்சப்புள்ள? நீங்கதான் செல்லம் குடுத்து கெடுக்குறீங்க.” என்று எனக்கும் இரண்டு செல்ல அடிகள் விழுந்தது.

நேற்று மாலை முதல் தொலைந்து போன குதூகலம் மீண்டுவிட்டதாய் உணர்ந்தேன்.

சற்று நேரத்தில் அகல்யா படிக்கப்போகிறேன் என்று கூறி தன் அறைக்குக் கிளம்பினாள். இரண்டடி நடந்தவள் திரும்பி, “அப்பா, இந்த physically emotionally மாதிரி இன்னும் ரெண்டு -allys இருக்குனு சொன்னியே, அது என்னது?” என்றாள்.

“அதுவா. First, legally. 18 வயசுக்கு அப்புறம் தான் உனக்கு partnerஅ choose பண்ற அனுமதியும் உரிமையும் கிடைக்கும்.”

“Oh, I know that already. ரெண்டாவது?”

“Partnerஆ? பிச்சுப்புடுவேன் பிச்சு” என்றாள் தேவகி.

“அதுக்குத்தான் இன்னும் மூனு வருசம் இருக்கே. அது போக உன் permission இல்லாம நான் ஒன்னும் பண்ண மாட்டேன் மா”

“அந்த பயம் இருக்கட்டும்” என்றாள் ice creamஐச் சுவைத்தபடி.

“நீ சொல்லுப்பா. ரெண்டாவது?”

“ரெண்டாவது, financially…”

“Financiallyயா? ஏன்?…”

“ம்ம்…if you wanna fuck around, do it in your own money. Not in mine!”

இதை அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. “That was rude ப்பா” என்றபடி அவள் முகம் சற்று வாடியது. “பரவால்லப்பா, தப்பு பண்ணினது நான் தான, இதெல்லாம் சகிச்சுத்தான் ஆகணும். சகிச்சுக்குறேன்” என்றபடி திரும்பிச் சென்றாள்.

“ப்ச், என்னங்க நீங்க, வெண்ணை திரண்டு வர்றப்ப பானைய உடைக்குற மாதிரி பேசிட்டீங்க?” என்றாள் தேவகி.

“இவ்வளவு நேரம் நீ கோவமா இருந்த, இப்ப ஒத்த சொல்லு நான் கடுமையா பேசின உடனே அவ supportக்கு வரியா?”

“ஆமா. இவ்வளவு நேரம் நீங்க அவ துணைக்கு இருக்கீங்கன்ற தைரியத்துல நான் கோவமா பேசினேன். நீங்களும் இப்ப கோவப்பட்டா எப்படி?”

“இப்ப இல்ல தேவா. காலைல மெரினாவுல இருந்தே பயங்கர கோவமாத்தான் இருந்தேன். எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா ஒரு கழிசடைய என்னோட compare பண்ணி பேசுவா? அப்பானா அமைதியாத்தான் இருப்பாரு, என்ன வேணா பேசலாம்னு  நினைச்சுக்கிட்டு இருக்காள்ல?”

“சரி விடுங்க. அதான் அவளுக்குப் புரிய வச்சு நம்மகிட்ட வர வச்சுட்டீங்களே!”

“…”

“என்னங்க…”

“…”

“ஓ! Ice cream காலியாயிடுச்சா? அதான் இப்படி சூடேறி பேசுறீங்களா?”

புன்னகைத்தேன்.

“உள்ள roomக்கு வாங்க. ரெண்டு cup தர்றேன்” என்று கண்ணடித்தாள்.

“வயசு வந்த பொண்ண வீட்டுல வச்சுக்கிட்டு நீயே இப்படி double meaningல பேசுனா எப்படி? இப்பதான் தெரியுது, அவளுக்கு அந்த மாதிரி எண்ணங்கள்லாம் எங்க இருந்து வருதுனு.”

“ம்க்கும், பெத்த பொண்ணு முன்னாடி வெக்கமில்லாம என்ன கட்டிப்புடிச்சு முத்தம் குடுக்குறீங்க. அதுல வராத எண்ணமா இதுல வரப்போகுது?”

“முத்தம் குடுக்குறது அன்ப வெளிப்படுத்துற அடையாளம். பொண்ணு பாக்குறதுல எந்த தப்பும் இல்ல. சம்பந்தமே இல்லாத ரெண்டு பேரு காசுக்காக முத்தம் குடுக்குறத tvல cinemaல பாக்குறா. அம்மா அப்பா முத்தம் குடுக்குறத மட்டும் பாக்கக் கூடாதா? என்ன ஞாயம் இது?”

“உங்க கிட்டலாம் பேசி ஜெயிக்க முடியாது…”

“வேற எப்படி ஜெயிப்பியாம்?”

“ம்ம்…உள்ள வாங்க, எப்படினு காமிக்குறேன்” என்ற கூறி கண்ணசைத்துவிட்டு படுக்கையறை நோக்கி நடந்தாள்.

நெட்டி முறித்தபடி நானும் பின்தொடர்ந்தேன்!

[முற்றும்]