ஞாயிற்றுக் கிழமை காலையில் தொலைக் காட்சிப் பெட்டியை உயிரூட்டியபடி நான் எனது மகளை அழைத்தேன்,
“தமிழி…”
“என்னப்பா?”
“இங்க வாம்மா. இன்னைக்கு TVல யாரப் பேட்டி எடுக்கப் போறாங்க தெரியுமா?”
“யாரப்பா?”
“என்னோட பள்ளிக்கூடத்துல படிச்ச ஒருத்தன. UKGல இருந்து 12ஆவது வரை நாங்க ஒரே வகுப்புல ஒன்னா படிச்சவங்க. 11, 12 வகுப்புகள்ல நாங்க ரெண்டு பேரும் ஒன்னாதான் உக்காந்து இருந்தோம்”
“ஓஒ. உங்க best friendsல ஒருத்தர்னு சொல்லுங்க. இப்ப என்ன பண்ணிட்டு இருக்கார்?”
“2015 வரை USல வேலை பாத்துக்கிட்டு இருந்தான். பிறகு வேலைய விட்டுட்டு ஊருக்குத் திரும்பிட்டான்.”
“ஏம்பா?”
தமிழி கேள்வி கேட்கத் தொடங்கிய பொழுது நிகழ்ச்சி தொடங்கியிருந்தது. தமிழும் ஆங்கிலமும் கலந்த மொழியில் ஒரு பெண் என் நண்பனை அறிமுகம் செய்து கொண்டிருந்தார்.
“அனைவருக்கும் வணக்கம். இன்னிக்கு இயற்கைவளம் நிகழ்ச்சியில நாம meet பண்ணப் போறது இயற்கை விஞ்ஞானி எழில்மோகன் அவர்களை. சென்னை அண்ணா universityல BE முடிச்சிட்டு அமெரிக்காவுல Stanford Universityல PhD பண்ணிட்டு அங்கேயே 2 வருசம் வேலையும் பாத்து வந்தாரு. பிறகு, இந்த corporate life, plum job, american dream எல்லாத்தையும் வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டு விருதுநகருக்கு வந்து உழவுத் தொழில் செஞ்சுக்கிட்டு எளிமையான வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு இருக்காரு. வாங்க அவரோட பேசலாம். வணக்கம் Mr. எழில்.”
“வணக்கம்ங்க.”
“நீங்க ஏன் இந்த முடிவ எடுத்தீங்க? American dream, கை நிறைய சம்பளம், வசதியான வாழ்க்கை, இதையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு வர எப்படி மனசு வந்துச்சு?”
“இது ரொம்ப simpleஆன ஒரு விசயம். அந்த நாட்டுக்குப் போனதுக்குப் பிறகு தான் மனிதர்களா நாம எவ்வளவு இயற்கை வளங்கள consume பண்ணிக்கிட்டு இருக்கோம்னு புரிஞ்சது. ஒவ்வொரு living beingக்கும் ஒரு footprint உண்டு. ஒரு காட்ட எடுத்துக்கிட்டீங்கனா, அந்தக் காட்ட வளர்க்குறதுல ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு பங்கு இருக்கு. ஒரு மானோ காட்டெருமையோ பழங்களைச் சாப்பிட்டுட்டு 5-10 km வரை தள்ளிப்போய் சாணம் போடும். அதனால அந்தப் பழங்களோட விதைகள் பயிரிடப்படுது. இதே ஒரு யானையா இருந்தா 40-50 km வரை கூட தள்ளி அவை பயிரிடப்படும். இப்படி விலங்குகளால காடு வாழுது. காடால விலங்குகள் வாழுது. ஆனா மனுசனோட footprint என்னனு பாத்தீங்கனா அழிவு மட்டும்தான். மரத்த வெட்டி காட்ட அழிக்கிறோம். விலங்குகள அழிச்சும் காட்ட அழிக்கிறோம். இதெல்லாம் தப்புனு புரிஞ்சுக்கிட்டேன். இதை மாத்தணும்னு முடிவெடுத்தேன். அதான் corporate job வேணாம்னு வந்துட்டேன்.”
“Great. ரொம்ப பெரிய ambitionனோட வந்திருக்கீங்க. ஆனா உங்களப் பாத்தா ரொம்ப எளிமையான வாழ்க்கை வாழ்ற மாதிரி தெரியுதே? கட்டம் போட்ட சட்டை, மங்கலான வேட்டி, அந்தக் காலத்து mobile phoneனு ஆளப் பாக்கவே ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கீங்களே!”
“Western countriesல சமீபமா minimalismனு ஒரு concept அதிகமா பயன்பாட்டுல இருக்கு. இது புது conceptலாம் கிடையாது. புத்தர் காலத்துல இருந்தே புழக்கத்துல இருக்குற ஒன்னு தான். ஒரு வகை துறவறம் மாதிரி தான் இது. வாழ்க்கை வாழ எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு தேவைகளக் குறைச்சுக்கறது தான் இந்த concept. உடம்பை மறைக்கத்தான் துணி. Raymondsல எடுத்துப் போட்டாதான் உடம்பை மறைக்கும்னு இல்ல, உள்ளூர்ல தைச்ச கைத்தறி ஆடையா இருந்தாலும் மறைக்கும். அதேபோல phone பேசுறதுக்குத்தான் இருக்கு. அதுல எதுக்கு internet? நான் பண்ற videos record பண்ண camera வச்சிருக்கேன். அது எல்லாத்தையும் onlineல upload பண்ண வீட்டுல desktopம் broadband connectionம் வச்சிருக்கேன். இதுவே போதுமே!”
என் நண்பன் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்க என்னிடம் இடை மறித்தாள் தமிழி. “என்னப்பா உங்க friend இவ்வளவு boringஆ இருக்காரு?”
“Boringஆ? இதுக்குப் பேரு maturedமா.”
“எது? iPhone வேண்டாம், basic phone போதும்னு சொல்றதுக்குப் பேரு தான் maturityயா?”
“இல்லியா பின்ன? அவன் சொன்னது சரிதான? பேசுறதுக்குத்தான phone. அதுக்கு basic phone போதுமே!”
“போதும் தான். ஆனா, iPhone இருந்தா இன்னும் வசதியா இருக்கும்ல. இவரு போற இடத்துக்கெல்லாம் பெரிய cameraவையும் computerஐயும் தூக்கிட்டுப் போறதுக்குப் பதிலா ஒரு குட்டி smartphoneஅ எடுத்துட்டுப் போறது easyயா இருக்கும்ல. இந்த sophisticationஅ வேணாம்னு சொல்றது எப்படி maturity ஆகும்?”
“Sophistictionஅ வேணாம்னு சொல்றதுக்கு ஒரு வகைப் புரிதல் வேணும். அதுக்குப் பேர்தான் maturity! தேவைக்கு அதிகமான எல்லாமே தேவையற்றது தான?”
“என்ன?”
“தேவைக்கு அதிகமானது எல்லாமே தேவை இல்லாதது தான?”
“தேவைக்கு…அதிகமா…இல்லாம…” நான் சொன்னதை தனக்குள்ளேயே சொல்லக்கொண்டும் புரிந்துகொள்ள முயன்றும் கொண்டிருந்தாள்.
“எடுத்துக்காட்டா ஒனடு சொல்றேன் கேளு. இப்போ, இந்த roomக்கு ஒரு tubelight வெளிச்சமே போதும்தான். அதனால ரெண்டாவது tubelightம் போட்டா, அது தேவையில்லாதது தான?”
“ரெண்டாவது tubelight போட்டா room இன்னும் brightஆ இருக்கும்ல?”
“இருக்கும். ஆனா தேவையில்லை தான?”

நேரம் போவதறியாமல் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம் – நானும் என் மகளும், என் நண்பனும் அப்பெண்ணும்.
அரைமணி நேரம் தாண்டிய பொழுது அந்நிகழ்ச்சி முடிவிற்கு வந்திருந்தது.
“கடேசியா ஒரு கேள்வி Mr. எழில். நீங்க vegetarianismஅ promote பண்றதா உங்க மேல ஒரு கருத்து மக்களுக்குப் பரவலா இருக்கு. ஏன்?”
“இதுவும் ஒரு வகை minimalism தாங்க. இறைச்சில புரதம் அதிகமா இருக்கு. இது சரிதான். ஆனா அந்தளவு புரதங்கள தன்னோட இறைச்சில சேத்து வைக்க அந்த விலங்குள் உண்ணுற புரங்களோட அளவு அதை விட அதிகம். இது விலங்குகளோட உணவுல இருக்குற புரதங்கள்ல கொஞ்சம் வீண்டிக்குற மாதிரி தான?”
“ஆனா காய்கறிகள விட இறைச்சி குறைவா சாப்பிட்டாலே அதேயளவு சத்துக்கள் நமக்கு கிடைக்குதே. அப்ப இது சேமிப்பு இல்லையா?”
“இல்ல, நீங்க சத்துக்களோட அடர்த்திய வச்சு பேசுறீங்க, நான் அளவை வச்சு பேசுறேன். Energy conservation law பத்தி schoolல படிச்சிருக்கீங்களா? Energyயோட மொத்த அளவு மாறவே மாறாது. ஆனா அதே energyய ஒரு formல இருந்து இன்னொரு formக்கு மாத்தும் பொழுது தவிர்க்க முடியாத loss கொஞ்சம் இருக்கும். அதாவது கொஞ்சம் வீணாகும். இங்கேயும் அதேதான். காய்கறிகள விலங்குகளுக்குக் குடுத்து சத்துகளைச் சேகரிச்சு அந்த விலங்குகளோட இறைச்சிய சத்துக்காகத் திங்குறதுக்குப் பதிலா காய்கறிகளையே நேரடியா திங்கலாமே! இதுதான் என்னோட கருத்து.”
இவர்கள் பேசிக்கொண்டிருந்த போது என் பள்ளிக்கால நினைவுகள் எனை ஆட்கொண்டது. எழில், நான் இன்று இறைச்சி உண்ணாமல் இருக்க அறிவியல் கொண்டு விளக்கம் சொன்ன போதிலும் அவன் உண்மையில் இறைச்சி உண்பதை நிறுத்திய நாள் என் நினைவில் வந்தது.
அப்பொழுது எங்களுக்குப் பன்னிரண்டு பதிமூன்று வயது இருக்கும். ஆறாம் வகுப்பா ஏழாம் வகுப்பா என்று சரியாக நினைவில் இல்லை. அவன் தந்தை சில நாட்கள் முன்பு உயிர் நீத்திருந்தார். பதினோறாம் நாள் காரியத்திற்கு நான் அவன் வீட்டிற்குச் சென்றிருந்தேன். மதியம் விருந்திற்கு ஆடு, கோழி, மீன் என்று பலவகை உணவுகள் பரிமாறப்பட்டன.
தந்தை இறந்தன்று அழுதவன், மீண்டும் அன்று விடாது அழுது கொண்டிருந்தான். அனைவரும் தந்தையை நினைத்து வாடுகிறான் என்று பாவப்பட்டனர்.
அவன் அன்னை என்னிடம் வந்து, “குமாரு, ஒரு வாய் கூட சாப்பிடாம இப்படி அழுது கரைஞ்சுக்கிட்டு இருக்கான். நீயாவது அவனுக்கு எடுத்துச் சொல்லி சாப்பிட வைய்யா” என்றார்.
“சரித்தே. நா அவன்ட்ட பேசுறேன்” என்றேன். மொட்டை மாடியில் புங்கை மரநழலில் அமர்ந்திருந்த அவன் அருகில் வந்தமர்ந்தேன். “டே மச்சி. வாடா, வந்து சாப்புடுடா.”
இல்லை என்று தலை அசைத்தான்.
“நேத்தெல்லாம் நல்லாதானடா வெளாண்ட. இன்னைக்கு ஏன்டா இப்படி அழுற?”
“…”
“தட்டுல சோறு வச்சப்புறம் சாப்பிடாம ஏன்டா எந்திச்சு வந்த?”
“முடியல டா.”
“என்னடா முடியல? அப்பா போயிட்டா என்னடா, நான் இருக்கேன் உன்கூட.”
“அதில்லடா.”
“பின்ன?”
“நீ சாப்டியா?”
“ம்ம் சாப்டேன்.”
“என்ன சாப்ட?”
“சோறு, கோழிக் குழம்பு, முட்டை.”
“ஆட்டுக்கறி சாப்புடல?”
“இல்ல.”
“…”
“என்னடா ஆச்சு? சொல்றா.”
“அவங்க தட்டுல எனக்கு ஆட்டுக்கறி வச்சாங்க.”
“அதனால என்ன? உனக்கு தான் ஆட்டுக்கறி புடிக்குமே.”
“அவங்க வச்சது சாதா ஆடு இல்லடா. அது தொட்டிவவுறன்டா.” தொட்டிவவுறன் என்பது எழில் வீட்டில் பிறந்து வளர்ந்த ஆடு. எந்த நேரமும் இலைதளைகளைத் தின்று கொண்டே இருப்பதால் அவன் ஆட்டிற்கு தொட்டிவவுறன் என்று செல்லப் பெயரிட்டு அழைத்து வந்தான். தினமும் மாலையில் அதனோடு விளையாடாது அவன் உறங்கியதில்லை. எங்கள் வகுப்பில் உள்ள பலருக்கும் தொட்டிவவுறனோடு பழக்கம் உண்டு. எழிலின் குடும்ப வழக்கப்படி, வீட்டில் ஒருவர் இறந்தால் அவர் வளர்த்து வந்த கால்நடைகள் அனைத்தும் பதினோறாம் நாள் படையலுக்கு வந்துவிடும். “தட்டுல கறியா தொட்டிவவுறனப் பாத்தொடனேயே எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? அந்த ஈரலப் பாத்ததுமே எனக்கு தொண்ட அடைச்சிக்கிச்சுடா. நேத்து வெளாண்டப்ப கீழ விழுந்தன்ல? கால்ல சின்னதா செராய்ச்சு வந்த புண்ணே அவ்வளவு வலிச்சது. தொட்டிவவுறனுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்? படையலுக்காக துண்டு துண்டா கூறு போட்டப்ப அது எவ்வளவு கதறிருக்கும்? எங்கப்பா தான் போய்ட்டாரு. தொட்டிவவுறன் என்னடா பாவம் பண்ணுச்சு? அத ஏன்டா கொல்லணும்?”
“தெரியலடா” பதில் சொல்வதறியாமல் அமர்ந்திருந்தேன்.
சிறிது நேரம் கழித்து எழில் அழைத்தான். “குமாரு”
“என்னடா?”
“பசிக்குதுடா. நீ போய் ஒரு தட்டுல சோறும் ரசமும் மட்டும் கொண்டு வரியா?”
“கோழி கூட வேணாமா?”
“இல்லடா, எனக்கு கறியே வேணாம்.”
“சரிடா. கொண்டு வர்றேன்.”
தொலைக்காட்சி நிகழ்ச்சி நிறைவுற்று இருந்தது. தமிழி விளையாடச் சென்றிருந்தாள். நான் மீண்டும் என் பள்ளி கால நினைவுகளை அசை போடத் தொடங்கினேன்.

குறள்:
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்

விளக்கம்:
புலால் என்பது வேறோர் உடம்பின் புண்ணே. அவ்வுண்மையை அறியப் பெறின் அதை உண்ணாதிருத்தல் வேண்டும்.